கர்நாடக ஆளுநரைத் திரும்பப் பெற பாஜக வலியுறுத்தல்!
கர்நாடக மாநிலத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது பாஜகவைச் சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 16 பேரை சபாநாயகர் பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டதால் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.
ஆனால், அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம் செய்தது செல்லாது என அண்மையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியான பிறகு அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாகக் கூறினர். ஆனால் அதனை ஏற்காமல் கர்நாடகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று ஆளுநர் பரத்வாஜ் மத்திய அரசுக்கு சிபாரிசு செய்தார்.
இந்நிலையில் கர்நாடக பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் அவரச கூட்டம் நடந்தது. கூட்டத்தில், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு பிறகு சட்டசபையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் பலம் 121 ஆக உயர்ந்து உள்ளது. நிலையில் அரசியலமைப்பு சட்டத்தை மீறி கர்நாடகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசுக்கு பரிந்துரை செய்த கவர்னர் பரத்வாஜை திரும்ப பெறக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கிடையே, கர்நாடகத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரைத்ததின் மூலம் இந்த மாநில மக்களை கவர்னர் பகிரங்கமாக அவமதித்து உள்ளார் என்று முதல்வர் எடியூரப்பா குற்றம் சாட்டி இருக்கிறார்.
பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் 121 பேரையும் இன்று குடியரசுத் தலைவர் முன் ஆஜர்படுத்தவும் பாஜக முடிவு செய்துள்ளது.
ஏழைகளுக்கு 20 கிலோ இலவச அரிசி: கையெழுத்திட்டார் முதல்வர் ஜெயலலிதா
சென்னை, மே 16- தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா, இன்று மாலை புனித ஜார்ஜ் கோட்டைக்கு சென்று முதல்வர் பணிகளை கவனிக்கத் தொடங்கினார். ஏழைகளுக்கு 20 கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டம் உட்பட 7 கோப்புகளில் அவர் இன்று கையெழுத்திட்டார்.ஏழைகளுக்கு 20 கிலோ இலவச அரிசி மற்றும் பரம ஏழைகளுக்கு 35 கிலோ இலவச அரிசி, அரசு ஊழியர்களின் பேறுகால விடுப்பு 6 மாதங்களாக அதிகரிப்பு, பெண்களுக்கான திருமண உதவித்தொகை ரூ. 50,000 ஆக உயர்வு, ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு 4 கிராம் இலவசத் தங்கம், மீன்பிடி தடைக் காலத்தில் மீனவர்களுக்கான நிவாரணத் தொகை ரூ. 2000 ஆக உயர்வு, முதியோர் உதவித்தொகை ரூ. 1000 ஆக உயர்வு ஆகிய 7 உத்தரவுகளில் ஜெயலலிதா கையெழுத்திட்டார்.தமிழகத்தை இந்தியாவின் முதன்மையான மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஜெயலலிதா தெரிவித்தார்.
ஜெயலலிதா வெற்றி தில்லியிலும் எதிரொலிக்கும்: மோடி
சென்னை, மே 16: தமிழகத்தில் ஜெயலலிதா பெற்றுள்ள வெற்றியானது, புதுதில்லியிலும் எதிரொலிக்கும் என்றார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. ஜெயலலிதா முதலமைச்சராகப் பதவி ஏற்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி இன்று காலை சென்னை வந்தார். அப்போது, விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். ஊழல் இந்தத் தேர்தலில் மிக முக்கியமான பிரச்னையாக வாக்காளர்களால் பார்க்கப்பட்டுள்ளது. மேலும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் தமிழ்நாட்டில் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் ஜெயலலிதா பெற்றுள்ள வெற்றி, நிச்சயம் தேசிய அரசியலிலும் எதிரொலிக்கும். ஜெயலலிதா முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின் தமிழகம் அனைத்து துறைகளிலும் தன்னிறைவு பெறும். அவர் மீது தமிழக மக்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ளனர் என்றார் மோடி.

